சிறு குறு தொழில் நடத்துவோருக்கும், சொந்த செலவில் சுய முயற்சியில் வெளி முதலீடு எதுவும் இல்லாமல் புத்தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் எப்பொழுதும் இருக்கும் ஒரு பெருத்த சந்தேகம்,
“எந்த செலவு அத்தியாவசியம், எந்த செலவு அனாவசியம்”
இது குறித்த எனது கருத்துகளையும், நம்முடைய தொழிலிலும், நிறுவனத்திலும் சிக்கன நடைமுறைகளை பின்பற்றுவது குறித்தும் தெரிந்து கொள்வோம்.
தொழிலில் சிக்கனம் என்பதன் வரையறை என்ன?
தொழில் நிறுவனத்தின் நீண்ட கால கொள்கை மற்றும் நீடித்த லாப இலக்குகளை பொருளாதார சிக்கல்கள் ஏதும் இல்லாமல் அடைவதை மையப்படுத்தி, செலவீனங்களை தொடர்ச்சியாக, ஒழுக்கமாக முறைபடுத்தி மேலாண்மை செய்வதே தொழில் சிக்கனம்.
“தொழில் சிக்கனம் என்பது, செலவுகளை முறைப்படுத்தி கட்டுக்குள் வைப்பது. செலவுகளுக்கு குருட்டுத்தனமாக கட்டுப்பாடு விதிப்பது அல்ல.”
“தொழில் சிக்கனம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல். ஒரு முறை முழுமையாக கட்டுப்படுத்தி, மறு முறை முழுமையாக உடைப்பதும் அல்ல”.
சிக்கனமான நிறுவனங்கள் என்பவை செலவு செய்யாத நிறுவனங்கள் அல்ல.வந்தால் அதிர்ஷ்டம், வராவிட்டால் துரதிர்ஷ்டம் என்று நினைத்து எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செலவு செய்யாமல், செலவுகளை நன்கு ஆய்வு செய்து, செய்யும் செலவுகளின் விளைவுகளை உணர்ந்து, அளந்து செலவு செய்யும் நிறுவனங்கள் சிக்கன நிறுவனங்கள் என்று வரையறுக்கலாம்.
இன்றைய தொழில் நிலை என்ன ?
தொழிலில் அனுபவத்தோடு, சரிவுகளை சமாளித்து மீண்டு வந்த தொழில் முனைவோர் சிக்கனம் குறித்த புரிதலோடு செயல்படுவதையும், முன் அனுபவம் இல்லாத தொழில் முனைவோர், வெற்றியும் வளர்ச்சியும் நிரந்தரம் என்ற நினைப்பில் தாராள செலவு செய்வதையும் காண முடிகிறது.
கடந்த தலைமுறை தொழில் முனைவோருக்கும் இந்த தலைமுறை தொழில் முனைவோருக்கும் இருக்கும் பெரிய வேறுபாடு “தொழிலில் சவால்களை (அ) சோதனைகளை எதிர் கொள்ளும் விதம் (risk taking appetite) ” என்று கருதுகிறேன்.
“சவால் (அ) புதிய சோதனை தோற்றால் என்ன ஆகும் என்று கடந்த தலைமுறையும், சவால் (அ) புதிய சோதனை வென்றால் என்ன ஆகும் என்று இந்த தலைமுறையும் யோசிக்கிறது”.
சிக்கனம் பழைய தலைமுறையின் பலம். தொழிலில் சவால்களை (அ) சோதனைகளை எதிர் கொள்ளும் விதம் புதிய தலைமுறையின் பலம். அனுபவம் வாய்ந்த தொழில் முனைவோரின் பலம் அடுத்த தலைமுறைக்கு கடத்த படுவதும், பலவீனங்கள் புதைக்க படுவதும் நீடித்த தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம்.
தோல்வி குறித்த பயமும், வெற்றி குறித்த அகந்தையும் நீக்கபட்டு, புது முயற்சிகள், சோதனைகள், சவால்கள் சரியான தரவுகளோடு ஊக்குவிக்கபடவும் வேண்டும்.
சிக்கனம் என்பது பழமையா?
விரைவாக மாறிவரும் உலக பொருளாதார சூழநிலைகளும், தொழில் நுட்ப வளர்ச்சிகளும் தொழில் துறைகளில் முன்னெப்பொழுதும் இல்லாத பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று தோன்றுகிறது.
“சிக்கனமான தொழில் என்பது பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று வளமான, சுய சார்புள்ள, புதுமைகளை ஏற்று தகவமைத்து கொள்ள கூடிய அமைப்பு.”
புதுமைகளை ஏற்று தகவமைத்து கொண்டு நீடித்த வளர்ச்சி அடைய பொருளாதாரத்தில் வளமான, சுய சார்புள்ள உருவாக்க தொழில் சிக்கனம் அவசியம்.
சிக்கனமான நிறுவனங்கள் எப்பொழுதும் செலவுகளை குறைக்கும், செயல் திறனை அதிகரிக்கும் புதுமைகளை ஏற்று கொள்ள கூடிய நிறுவனங்களாக இருக்கும்.
எது சிக்கனம் / எது கஞ்சத்தனம் ?
சிக்கனம் என்பது அளந்து செலவு செய்வது; கஞ்சத்தனம் என்பது செலவே செய்யாமல் இருப்பது.
சிக்கனம் என்பது வீணான செலவு செய்யாமல் இருப்பது; கஞ்சத்தனம் என்பது சரியான செலவுகளுக்கு கூட குடுக்க மனமில்லாமல் இருப்பது.
சிக்கனம் என்பது அதிகமான விலை என்றாலும் சரியான தரமான பொருட்களை தேர்வு செய்வது; கஞ்சத்தனம் என்பது விலை குறைவு என்பதற்காக தரமில்லாத மட்டமான பொருட்களை தேர்வு செய்வது.
சிக்கனம் என்பது செலவு செய்யும் பணத்துக்கு அதிகமான மதிப்பு உண்டாகும் வகையில் திட்டமிடுவது; கஞ்சத்தனம் என்பது செலவை குறைக்கும் நோக்கில், அந்த செலவால் கிடைக்கும் கூடுதல் மதிப்பை பற்றி யோசிக்கமால் செலவை நிறுத்துவது.
சிக்கனம் என்பது செலவு செய்து புதுமைகளை புகுத்தி செயல்திறனை அதிகரித்து அதிகமான பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் பணத்தை சேமிப்பது; கஞ்சத்தனம் என்பது பணம் என்ற ஒற்றை குறியோடு புதுமைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்திறனை குறைத்து, பணியாளர்களை உந்துதிறனை குறைத்து, எதிர்மறை சிந்தனைகளை தூண்டி பணி சூழலை பாதிப்பது.
சிக்கனம் என்பது நீண்ட கால அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுப்பது; கஞ்சத்தனம் என்பது குறுகிய மனப்பான்மையோடு முதலீட்டு முடிவுகளை தள்ளி போடுவது.
சிக்கனம் தவறாக புரிந்து கொள்ளபடுவதன் விளைவு என்ன ?
செலவுகளை குறைப்பது நிறுவனத்திற்கு நல்லது என்றால் கூட பின்விளைவுகளை யோசிக்காமல், சரியான திட்டமிடல் இல்லாமல் எடுக்கும் செலவு குறைப்பு முடிவுகள் தவறாக முடிய வாய்ப்புகள் உண்டு.
“செலவுகளை குறைப்பதனால் நிறுவனம் வளராது. வருவாயை அதிகபடுத்துவதன் மூலமே வளர்ச்சி சாத்தியம்.”
ஆகவே செலவு குறைப்பு நடவடிக்கைகள், அத்தியாவசியாமன தொழில் முறைகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் வளர்ச்சி தடைபடவும், எதிர்மறை வளர்ச்சிக்கு தள்ளப்படவும் வாய்ப்பு உள்ளது.
செலவு குறைப்பு நடவடிக்கைகள் உண்டாக்கும் வேலை சூழல் விளைவுகள், பணியாளர் பணி சூழல் விளைவுகள் சில நேரங்களில், நாம் எதிர்பாராத எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். சில நேரங்களில் தகுதி வாய்ந்த பணியாளர்களைக்கூட இலக்க நேரிடும்.
அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்வது, சில நேரங்களில் சந்தையில் நிறுவனத்தை பத்தோடு பதினொன்றாக வைத்து விடும். உதாரணமாக உணவகங்களில் சிறந்த கழிவறைகளை வருமானம் இல்லாத செலவு என்று கருதி, சுத்தமாக வைக்காத பட்சத்தில் வாடிக்கையாளர் வருகை குறைந்து வருவாய் குறையும்.
சிக்கனம் என்ற பெயரில் சந்தைப்படுத்தும் செலவுகளை குறைப்பதால் ஏற்படும் வருவாய் இழப்புகள் அதிகம்.
“சந்தை படுத்தும் செலவுகள் நிறுவனத்தின் நாளைய வளர்ச்சிக்கு செய்யபடும் செலவு. அதை இன்றைய வருவாயோடு ஒப்பிடுவது தவறு.”
செலவுகளை குறைக்கிறோம் என்ற பெயரில் பாதுகாப்பு மற்றும் நிறுவன காப்பீடு சார்ந்த செலவுகளை குறைப்பது (அ) செய்யாமல் இருப்பது மொத்த முதலீட்டுக்கும் இழப்பை உண்டாக்கும்.
சிக்கனம் என்ற பெயரில் வாடிக்கையாளர் சேவையை சரியாக வழங்காமல் இருப்பது நிறுவனத்தை சரிவு பாதைக்கு கொண்டு செல்லும். சரியான உபகரணங்கள், தகுதியான ஊழியர், சிறப்பான பயிற்சி போன்றவற்றில் முழுமை பெறுவதன் மூலமே நிறுவனம் வளர முடியும்.
செலவுகளை குறைக்கிறோம் என்ற பெயரில் எல்லா பணிகளையும் நாமே செய்ய வேண்டும் என்ற முடிவு செய்வது நேரத்தையும், பணத்தையும், விரையமாக்கும். முக்கியத்துவம் இல்லாத தெரியாத வேலைகளை சரியான பயிற்சி இல்லாமல் பழகி செய்து கொள்ளலாம் என்பது தவறுகளுக்கு வழி வகுக்கும்.
செலவு குறைவு என்பதற்காக தரக்குறைவான பொருட்களை வாங்குவது, சரியான பணியாளர்களை தேர்வு செய்யாமல் இருப்பது, சரியான ஊதியம் சரியான நேரத்தில் வழங்காமல் இருப்பதும் நிறுவன சரிவுக்கான அறிகுறி.
சிக்கனமாக இருப்பதின் நன்மைகள் என்ன ?
எதிர்பார்ப்புகள் குறைந்து பாராட்டுகள் அதிகரிக்கும் - அனாவசியமான செலவுகள் குறைக்கபட்டு சரியான செலவுகள் செய்யப்படும் போது பணியாளர் மத்தியில் நிறுவனத்தின் முடிவுகள் பாராட்டப்படும். சிக்கனமான நிறுவனத்தால் வழங்கப்படும் சலுகைகள் எதிர்பார்ப்புகளாக அல்லாமல் உண்மையான பாராட்டாக கருதப்படும்.
நிறுவனம் சரியான திசை & இலக்குகளை நோக்கி பயணிக்கும் – தேவையில்லாத வேலைகளுக்கு இல்லை/வேண்டாம் என்ற பதில்கள் வரும். பணியாளர்கள் தாம் செய்யும் வேலைகளின் முக்கியத்துவம் மற்றும் பொறுப்பு உணர்ந்து கவனக்குறைவு இல்லாமல் பணியாற்ற சிக்கன நிறுவனங்கள் உந்துதலாக இருக்கும்.
பணிகள் முன்னிலைவரிசை படுத்தப்பட்டு செயல்படுத்தபடும் – எந்த வேலை வாடிக்கையாளர் தேவை, எது முன்னால் செய்யபட வேண்டும், எது பின்னால் செய்ய படவேண்டும், எது முக்கியாமன வேலை, எது செய்யபட வேண்டியது, எது செய்ய தேவை அற்றது போன்றவை தெளிவு படுத்தப்பட்டு குழப்பங்கள் இல்லாத பணிச்சூழல் உண்டாகும்.
பணிகளை முடிக்க புதுமையான யோசனைகள் தோன்றும் – பற்றாக்குறை என்பது கண்டுபிடிப்பின் தாய் என்ற கூற்றுக்கு ஏற்ப, சிக்கனமான நிறுவனங்கள் வேலையை எளிமையாக்கும் எண்ணெற்ற கண்டுபிடிப்புகளை உண்டாக்கும். சிக்கலான வழிகளுக்கு மாற்று வழிகள் கண்டறிவதில் சிக்கன நிறுவனங்கள் கில்லாடிகள்.
வாடிக்கையாளர் தேவையை தெளிவாக புரிந்து கொள்ளும் - வாடிக்கையாளர் சார்ந்த சிறந்த புரிதல் சிக்கன நிறுவனங்களுக்கு அதிகம் இருக்கும். வாடிக்கையாளரை தக்க வைக்கும் நோக்கில், வாடிக்கையாளரின் வலியினை சரியாக புரிந்து சிறப்பான தீர்வு வழங்கும். நீண்ட கால தொடர்புகளை உண்டாக்க சிக்கன நிறுவனங்கள் எப்பொழுதும் முயற்சிக்கும்.
வாடிக்கையாளருக்கு மதிப்பு கூட்டும் விஷயங்கள் – நிறுவன தொழில் வாடிக்கையாளருக்கு சேவைக்கான தேவை என்பது
“வருமானம் கூட்டுவதாகவோ, செலவு குறைப்பதாகவோ, ஆபத்துகளை குறைப்பதாகவோ”
இருந்தால் மட்டுமே பணம் செலவு செய்து வாங்குவார்கள் என்ற தெளிந்த புரிதலோடு பொருட்களை வடிவமைப்பு செய்வார்கள்.
பொருட்கள் வடிவமைப்பு – எளிமையான, விலைக்கு ஏற்ற மதிப்பு உள்ள, நுகர்வோர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான பொருட்களை சிக்கனமான வகையில் வடிவமைப்பு செய்வது.
கற்று கொள்ளும் மனப்பான்மை – தக்கன மட்டுமே பிழைத்து வாழும் என்பதை உணர்ந்து புதிய தொழில் நுட்பங்களை விரைந்து கற்று கொண்டு, சிக்கன நிறுவனங்கள் தக்கனவையாக மாற்றி கொண்டு பிழைத்து வாழும்.
எண்ணிக்கை சார்ந்து முடிவெடுத்தல் – முடிவுகளை எப்பொழுதும் விளைவுகளோடு ஒப்பிட்டு, சாதக பாதக அம்சங்களை ஆய்ந்து முடிவு எடுப்பார்கள். எண் சார்ந்த முடிவுகளோ, தரம் சார்ந்த முடிவுகளோ சரியான அளவீடுகளை வரையறை செய்து, கண்காணித்து மேம்படுத்துவதில் சிக்கன நிறுவனங்கள் முனைப்போடு இருப்பார்கள்.
சிறந்த அலகு பொருளாதாரம் – நிலையான கொள்முதல், குறைவான உற்பத்தி செலவு, குறைந்த கழிவுகள், சிறந்த தரம், திறன் மிகு விற்பனை சங்கிலி, சரியான விலை, என ஒரு வெளி நிதி சாரா சுய சார்பு கொண்ட அலகு பொருளாதாரம் சிக்கன நிறுவனங்களில் பார்க்கலாம்.
சிக்கன மனநிலை என்பது பணத்தின் அளவை பொறுத்தது அல்ல – பணம் குறைவாக உள்ளது சிக்கனம் என்பதோ நிறைய உள்ளது தண்டம் என்றோ முடிவு எடுக்காமல் சிக்கனம் வேறு பணம் வேறு என்ற புரிதலோடு முடிவுகளை எடுப்பார்கள். வங்கியில் இருக்கும் பணம் என்பது அவசர கால மற்றும் தொழில் முடக்க காலங்களில் நிறுவனத்தை உயிர்ப்போடு வைக்க பயன்படும் என்ற நீண்ட கால புரிதல் இருக்கும்.
சிக்கனம் என்பது கலாசாரம் – சிக்கன தொழில் நிறுவன மன நிலையானது ஒரு நீர் ஊற்று போல, பரவ கூடியது. பணியாளர்கள், அவர்களின் குடும்பங்கள், நிறுவன ஒப்பந்ததாரர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் இந்த சிக்கன மனநிலை வேலை, பணியிடம் என்று இல்லாமல் பரவி, பின்னர் இது ஒரு சுய ஒழுக்கமாக மாறக்கூடியது.
நிறுவனத்தில் சிக்கனம் குறித்த கருத்து கணிப்பு
கீழகண்ட கருத்து கணிப்பை நிறுவனத்தின் மேலாளர்களும் பணியாளர்களும் எடுப்பதன் மூலம் சிக்கனம் குறித்த புரிதல் எவ்வாறு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
“நிறுவனத்தின் மேலாளர்களும் பணியாளர்களும்” என்ற முன்னிலையோடு கேள்விகளை படிக்கவும்.
நிறுவனத்தின் சிக்கன கலாச்சாரத்துக்கு யார் பொறுப்பு ?
சிக்கனமான நடைமுறைகளை அறிமுகப்படுத்தவும் தொடர்ந்து அதில் பயணிக்கவும், நிறுவனத்தின் சிக்கன கலாச்சாரம் அனைவரிடமும் பரவலாக்கப்படல் வேண்டும்.
“சிக்கன கலாச்சாரம் என்பது நிறுவனத்தில் கணக்கு பதிவியல் துறையோ, நிதித்துறையோ, தணிக்கைத்துறையோ சார்ந்த ஒரு துறையின் பணி அல்ல. ஒவ்வொரு துறையின், ஒவ்வொரு ஊழியரின் பொறுப்பு.”
சிக்கன நடைமுறைகளை ஆரம்பிக்கும் இடம் நிறுவனத்தின் உயர் மேலாண்மை அமைப்பு. இந்த பதவியில் உள்ளவர்கள் சிக்கன கலாசாரத்துக்கு முன் மாதிரியாக செயல் பட வேண்டும். சிக்கனம் என்பது நம்முடைய நிறுவனத்தில் என்ன என்பதை வரையறை செய்வதில் இருந்து, சரியான இலக்குகளை நிர்ணயம் செய்து, அதற்கான வரவு செலவு திட்டம் தயார் செய்வது என்பது ஒரு பக்கம் என்றால், பணியாளர்களிடம் சிக்கன நிறுவனத்தை கட்டமைப்பதன் முக்கியத்துவத்தை விளக்கி, கடைநிலை ஊழியர் வரை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் படும்படி பயிற்சிகளை வழங்குவதும் உயர் மேலாண்மை அமைப்பின் பொறுப்பு.
சிக்கன நடவடிக்கைகள் செயலாக்கம் செய்யும் பொறுப்பு ஒவ்வொருவருடையது. ஒவ்வொரு பணியாளரும் அவரவர் துறையில் உள்ள திறன்குறைந்த செலவு அதிகமாக நடைபெறும் இடங்களை கண்டறிந்து, முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைபடுத்தி முனைப்புடன் சரி செய்யவேண்டும்.
சிக்கன கலாச்சாரத்தை எவ்வாறு நடைமுறை படுத்துவது?
சிக்கன கலாச்சாரத்தை நடைமுறைபடுத்த தெளிவான திட்டமிடலுடன் சரியான யுக்திகளும், முழுமையான ஈடுபாடும் நிறுவன தலைமையிடம் இருந்து தேவைப்படும்.
கீழ்கண்ட படிநிலைகள், சிக்கன கலாச்சாரத்தை எவ்வாறு நடைமுறைபடுத்துவது என்ற ஒரு அடிப்படை புரிதலை கொடுக்கும்.
செலவுகளை சீராய்வு செய்யுங்கள் – அனைத்து செலவுகளையும் முறையாக வகைப்படுத்தி, எங்கெல்லாம் சேமிப்புக்கான வாய்ப்பு உள்ளது என்று கண்டுபிடியுங்கள்.
திறன் குறைந்த பயன்பாடுகளை கண்டறியுங்கள் – நிறுவனத்தில் மனிதவளம், உற்பத்தி தேவை பொருட்கள், இயந்திரங்கள், நிதி மற்றும் கணக்கு துறை போன்றவற்றில் உள்ள திறன் குறைகளை கண்டு பிடியுங்கள்.
சரியான இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள் – தெளிவான புரிதலுடன் அடையக்கூடிய இலக்குகளை சரியான விளக்கத்துடன் வரையறை செய்யுங்கள். எத்தனை சதவிகிதம் செலவுகள் குறைக்கப்பட வேண்டும், எவ்வளவு சதவிகிதம் திறன் அதிக படுத்த பட வேண்டும், எவ்வளவு சேமிப்பு இலக்கு போன்றவை அவசியம்.
பயிற்சிகளும் & சிக்கன மனநிலையும் - கொள்கைகளையும், இலக்குகளையும், நடைமுறை படுத்த தேவையான விளக்கங்களையும் துறை வாரியாக கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் கொண்டு சேருங்கள். சிக்கன மனநிலை என்பது கஞ்சத்தனம் அல்ல என்ற புரிதல் வருவதற்கு நிறைய பயிற்சிகளும், சீராய்வு கூட்டங்களும் தேவைப்படும்.
செயல்முறை – சிக்கன நடைமுறைகள் பின்பற்றப்படும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களுக்கு தொடர்ச்சியாக தீர்வுகள் காணப்படவேண்டும். சிறு சிறு பின்னடைவுகள் வந்தாலும் நீண்ட கால அடிப்படையில் சரியான திசையில் செல்கிறோம் என்ற உறுதி வேண்டும்.
ஆவண படுத்துதல் - சிக்கன நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளை முறையாக ஆவணப்படுத்தி, ஊக்கபடுத்த வேண்டும். சிக்கன நடவடிக்கை குறித்த முன்னேற்றங்கள் நிறுவனத்தின் ஊழியர் கூட்டங்களில் பகிரப்பட வேண்டும்.
முடிவாக தொழில் நடத்தும் செயல்முறை “அதிகமாக வைத்து அதிகமாக செய்யுங்கள்” என்று தொடங்கி “குறைவாக வைத்து அதிகமாக செய்யுங்கள்” என்று வளர்ந்து இன்று “குறைவாக வைத்து சிறப்பாகவும், அதிகமாகவும் செய்யுங்கள்” என்று வளர்ந்து நிற்கின்றது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்து “தரமான பொருட்களும், துரிதமான சேவையும், குறைவான விலைக்கு” கிடைக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். முதலீடு பெற்ற நிறுவனங்கள் அனைத்து துறைகளிலும் பறந்து விரிந்து தள்ளுபடிகளை வாடிக்கையாளருக்கு வழங்குகின்றனர். இத்தகைய சூழநிலைகளில் தொழில் நிறுவனங்கள், தொழில் வளர்ச்சிக்கு தரமான பொருட்களை குறைவான செலவில் தயாரித்து, துரிதமான சேவையை திறன்மிகு சந்தை சங்கிலிகள் மூலம், சரியான விலைக்கு வழங்க வேண்டி உள்ளது.
சிக்கன நிறுவனங்கள் இன்றைய தேவை என்பதை விட கட்டாயம் என்பதே சரியாக இருக்கும்.
அருமை! சிறப்பு
ஒரு தெளிவான புதிய பார்வையை பகிர்ந்தமைக்கு நன்றி ..
உங்கள் பதிவை ஒரு சிறிய-கேள்வி பதிலாக துவங்கி இருக்கலாம் ..அது வாசகர்களுக்கு இன்னும் பலனளிக்கலாம்